தூத்துக்குடியில் குடியரசு தின விழா.. ரூ. 10.77 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...

தூத்துக்குடியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, 36 பேருக்கு ரூ. 10.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-01-26 14:28 GMT

குடியரசு தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் செந்தில்ராஜ் ஏற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை ஆட்சியர் செந்தில்ராஜ் பறக்கவிட்டார்.

நிகழ்ச்சியின்போது, காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 406 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட் உதவிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.


மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டி, 7 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 3 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.

மேலும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தில் 3 பயனாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கான ஆணை ஆகியவை வழங்கப்பட்டன.


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 11 பயனாளிகளுக்கு பெட்டிக்கடை வைப்பதற்கு உதவித் தொகை, ஒரு பயனாளிக்கு ரெடிமேட் துணிக்கடை வைப்பதற்கு உதவித்தொகை என மொத்தம் 36 பயனாளிகளுக்கு 10 லட்சத்து 77 ஆயிரத்து 818 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் 125 பேர் கலந்துகொண்ட பறையாட்டம், கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News