தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ஆய்வு...

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிய ரயில் வசதி கேட்டு அவரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-11-13 06:55 GMT

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக, சாலை போக்குவரத்து, வான்வழி, கடல்வழி மற்றும் ரயில்வே போக்குவரத்து ஆகிய நான்கு வசதிகளையும் கொண்டதாக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது. இருப்பினும், போதிய ரயில் வசதி இல்லை என்ற குறைபாடு இருந்து கொண்டே இருக்கிறது. தூத்துக்குடி- சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகர் விரைவு ரயில், சென்னை-கோவை இணைப்பு ரயில், தூத்துக்குடி- பெங்களூரு இடையேயான மைசூரு விரைவு ரயில் மற்றும் தூத்துக்குடி- திருநெல்வேலி இடையேயான பயணிகள் ஆகிய நான்கு ரயில்கள் மட்டுமே தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி- மதுரை இடையே இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளதால் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிடம் பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு வசதிகளையும் அவர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரயில் நிலைய பணியாளர்கள், ஊழியர்களிடம் இருக்கக்கூடிய வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகளை குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் கேட்டறிந்தார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆய்வு நீடித்தது. ஆய்வின் போது மதுரை கோட்ட மூத்த பொறியாளர் பிரவீனா, தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளர் செந்தில்குமார், ஸ்டேஷன் மாஸ்டர் மரிய ராஜேஷ், ரயில்வே பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும், ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம், ரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் வந்து செல்ல வசதியாக கிரேட் காட்டன் ரோட்டில் இருந்து புதிய சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, அவர் ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்திடம் அளித்த மனு விவரம் வருமாறு:

தூத்துக்குடி துறைமுகத்தையும், கொச்சின் துறைமுகத்தையும் இணைக்கும் வகையில் (வண்டி எண் : 16791-16792) திருநெல்வேலி பாலக்காடு- திருநெல்வேலி பாலக்காடு விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்காக புதிதாக சாலை ஒன்றை அமைக்க வேண்டும். தூத்துக்குடி - கோவை இரவு நேர நேரடி ரயில் இயக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News