தூத்துக்குடியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-25 14:34 GMT

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் தாலுகா, கீழநம்பிபுரம் கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த தலைமையாசிரியர் குருவம்மாள், ஆசிரியர் பாரத் ஆகியோர் மீது மாணவனின் பெற்றோர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரங்கராஜன் ஆர்ப்பாட்டத்தின்போது பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் பேசினர்.

Tags:    

Similar News