தூத்துக்குடியில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது.

கந்து வட்டிக்கு பணம் வசூலிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக் கப்படுவார்கள் என காவல்துறை எச்சரித்துள்ளது

Update: 2021-09-19 20:02 GMT

தூத்துக்குடியில் கந்துவட்டி கேட்டதால் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட தெரசையா

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கந்து வட்டிக்கு கடன் கொடுத்து, நெருக்கடி கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி ,பூபாலராயர்புரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி ஆவுடையாச்சி (42) என்பவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் தொழில் நடத்துவதற்காக அதே பகுதியை சேர்ந்த பர்னபாஸ் மகன் தெரசையா (62) என்பவரிடம் கடந்த 2017ம் ஆண்டு கடனாக ரூபாய் 10,000/- மும், அதன் பிறகு ரூபாய் 1 லட்சமும் சிட்டைக்கு கடனாக வாங்கியுள்ளார். தொடர்ந்து அவரிடமே ஆவுடையாச்சி, தனது 16 ½ பவுன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைத்து ரூபாய் 3,45,000/- வரை கடன் வாங்கியுள்ளார்.

கடன்களுக்கு ஆவுடையாச்சி கடந்த 2 வருடங்களாக வட்டி எதுவும் கட்டவில்லை. இதுகுறித்து சிட்டைக்கு கடன் கொடுத்த தெரசையா, ஆவுடையாச்சியிடம் ஏன் வட்டி கட்டவில்லை என கேட்டுள்ளார். இதற்கு ஆவுடையாச்சி, தான் அடகு வைத்த நகைகளை விற்று கடனை முடித்து கொள்ளுங்கள் என கூறியதற்கு, தெரசையா, ஆவுடையாச்சி கொடுத்த நகை, வட்டிக்கு மட்டுமே சரியாகவிட்டது என்றும் ரூபாய் 1 லட்சம் சிட்டை வாங்கியதற்கு ரூ. 6 லட்சம் வட்டியோடு சேர்த்து மொத்தம் 7 லட்சம் கட்ட வேண்டும் என கூறி, கந்துவட்டி கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து, ஆவுடையாச்சி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி, வள்ளிநாயகம் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடி பூபல்ராயர்புரத்தைச் சேர்ந்த தெரசையா என்பவரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து, கந்து வட்டிக்கு கடன் கொடுத்து, பணம் வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News