சர்வதேச கடலோர தூய்மை தினம்: முத்துநகர் கடற்கரையில் தூய்மை பணி செய்த மாணவர்கள்

சர்வதேச கடலோர தூய்மை தினம் : முத்துநகர் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவ - மாணவியர்கள்.

Update: 2021-09-26 08:12 GMT

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவ மாவியர்கள் ஈடுபட்டனர்.

கடலில் ஏற்படும் மாசுகள் 80 விழுக்காடு நிலத்தில் வாழும் மக்களால் ஏற்படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வந்து சேர்வதால் மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் கடற்பறவைகள் மற்றும் ஒரு லட்சம் கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதன் மூலம் அதனை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் கடல் பகுதியில் தேவையற்ற குப்பைகளை கொட்ட கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடந்த ஒரு வார காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மீன்வளக் கல்லூரி மாணவ மாணவிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் இன்று காலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை மீன்வளக் கல்லூரி முதல்வர் சாந்தகுமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் நீண்டு உள்ள கடற்கரை பகுதியை பாதுகாக்க வேண்டியது முக்கியமானது என்ற அடிப்படையில் கடலோரப் பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் 2030ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடலோரப் பகுதி தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வகையில் அச்சிடப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை சாலைகளில் செல்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News