தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் கைதான 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் கைதான இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-01-28 07:01 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர், கொலை, கொலை முயற்சிகளில் ஈடுபடுவோர், போக்சோ வழக்குகளில் கைதானவர்கள் என தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 30.12.2022 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் பகுதியில் உள்ள பைரவர் கோயிலின் முன்பு அந்தக் கோயிலின் பூசாரியான சரவணன் (வயது 34) மற்றும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (56) ஆகியோர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கப்பட்டனர்.

இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அந்தக் கோயிலில் தங்கி இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். கைதான சுரேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 7.11.2022 அன்று தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டார்மடம் தாமரைமொழி பகுதியை சேர்ந்தவர்களான அருண் பாண்டி (22) மற்றும் சீனி (28) ஆகியோரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கப்பட்டனர்.

இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அருண் பாண்டியின் இருசக்கர வாகனத்தையும் திருடி சென்றதாகவும், குலசேகரன்பட்டினம் தேரியூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (28) மற்றும் சிலரை தட்டார்மடம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதில், சரத்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ் அறிக்கை தாக்கல் செய்தார்.

இரு காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், சுரேஷ் மற்றும் சரத்குமார் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, திருச்செந்தூர் பைரவர் கோயிலில் தங்கி இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் குலசேகரன்பட்டினம் தேரியூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News