தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு 8 ரோந்து வாகனங்களை வழங்கிய தமிழக அரசு!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 8 ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

Update: 2023-03-23 07:10 GMT

ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காவல் நிலையங்களுக்கு வழங்கி ரோந்துப் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல் துறையில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல்வேறு  அதி நவீன வசதிகளுடன் கூடிய நான்கு சக்கர ரோந்து வாகனங்களை சமீபத்தில் அரசு ஒதுக்கீடு செய்தது. மேலும், சிறிய தெருக்களிலும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஏற்கெனவே காவல் துறைக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு அவை செயல்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், வழிப்பறி, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்ற  சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு அதிவேகமாக செல்லக் கூடிய இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிக்க தமிழக அரசு காவல் துறைக்கு அதிவேக இருசக்கர ரோந்து வாகனங்களை வழங்கி உள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய 7 லட்சத்து 4 ஆயிரத்து 208 ரூபாய் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று (23.03.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன்படி ஆறுமுகநேரி, மத்தியபாக போக்குவரத்து பிரிவு, தென்பாக போக்குவரத்து பிரிவு, தாளமுத்துநகர், முத்தையாபுரம், சிப்காட், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும் குலசேகரபட்டினம் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்கு அந்த இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News