உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை...

தூத்துக்குடி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-24 10:12 GMT

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் போன்றவை கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு வரப்பெற்ற புகாரினைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் தூத்துக்குடி மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் அடங்கிய குழுவினர் தூத்துக்குடியின் பூபால்ராயபுரத்தில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்த கடையில் 201 கிலோ காலாவதியான, லேபிள் இல்லாத மற்றும் போலி முகவரியிட்ட லேபிளுடன் கூடிய உணவுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுாகப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:

சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸில் காலாவதியான 201 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்டபட்டது. போலி முகவரியுடன் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்ய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதைப்போல், தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள உணவகத்தில் ஆய்வு செய்த பொழுது, தயாரிப்பு தேதி இல்லாத, 6 கிலோ உறைநிலையில் இருந்த சிக்கன் மற்றும் நண்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு வணிகர்கள் யாரேனும், காலாவதியான, லேபிள் இல்லாத, தப்புக்குறியீடான உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது உணவகங்களில் பயன்படுத்தினாலோ, அந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து, தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவுப் பொட்டலங்களில் காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். மாவட்டத்தில் எந்தவொரு கடையாவது காலாவதி உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக அறிந்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

புகார் அளிப்போர் குறித்த விபரம் ரகசியம் காக்கப்படும். உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.

Tags:    

Similar News