தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர்களுக்கு கடன் வழங்கும் காலம் நீட்டிப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மானாவாரி பயிர்களுக்கு கடன் வழங்கும் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-06 09:57 GMT

கூட்டுறவு கடன் சங்கம். (கோப்பு படம்).

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பயிர் கடன், நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பருவ காலங்களிலும் இந்த கடனுதவி வழங்கப்படுவது உண்டு. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மானாவாரி பயிர்களுக்கு கடன் வழங்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில், தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் 30.11.2022 ஆம் தேதி வரை 14543 விவசாயிகளுக்கு ரூ . 130 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் 2023 மார்ச் இறுதிக்குள் மேலும் 60 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பயிர்சாகுபடி காலங்களில் பருவமழை முன்பின் மாறுபடுவதால் கடன் வழங்கும் காலஅளவில் தெரிவிக்கப்பட்டுள்ள கடன் வழங்கும் காலங்களுக்கு ஒரு மாதம் முன்னதாகவோ அல்லது பின்னரோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க பதிவாளர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி உறுப்பினர்களிடம் உரிய கடிதம் பெற்றுக் கொண்டு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி பயிர்க்கடன் அனுமதிக்கலாம். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகின்றன.

கடன் பெற்ற தேதியில் இருந்து குறித்த காலத்திற்குள் பயிர்க்கடனை முழுவதும் செலுத்துவோருக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்க்கடன் ரூ. 1,60,000 வரையிலும் பெறும் விவசாயிகளுக்கு நபர் ஜாமீன் அடிப்படையிலும் ரூ. 1,60,000 -க்கு மேல் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு சொத்து அடமானத்தின் பேரிலும் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து புதிய உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்குமாறு சங்க செயலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனவே விவசாயிகள் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர்கடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News