தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.. எஸ்.பி. அதிரடி...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-01-24 17:12 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபடுவோர், புகையிலை பொருட்கள், கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 29.12.2022 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் அத்துமீறி நுழைந்து உணவு விடுதியின் உரிமையாளரான ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த பாலகுமரேசன் (45) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கில் கைதான ஆறுமுகநேரி ராஜமணியாபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிபிரதீப் (20) மற்றும் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் ரூபன் (19) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 25.12.2022 அன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பூர் அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (50) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கைதான குரும்பூர் அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 18.11.2022 அன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தலாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் வைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணிபுரியும் விளாத்திகுளம் பூசனூரைச் சேர்ந்த அய்யப்பசாமி (42) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த ரூபாய் 1,50,470 பணம், 40 மதுபாட்டில்கள் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கைதான தூத்துக்குடி சிலுவைபட்டி துரைசிங் நகரைச் சேர்ந்த விக்ரம் (22) மற்றும் சிலுவைப்பட்டி தாய் நகரைச் சேர்ந்த ஆனந்த் (29) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடும்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், ஆறுமுகநேரி ராஜமணியாபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிபிரதீப் மற்றும் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் ரூபன், குரும்பூர் அலகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி சிலுவைபட்டி துரைசிங் நகரைச் சேர்ந்த விக்ரம், சிலுவைப்பட்டி தாய் நகரைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News