தூத்துக்குடி நகரில் தாறுமாறாக சென்று விபத்தை ஏற்படுத்திய கார்.. போலீஸார் விசாரணை…

தூத்துக்குடி நகரின் பிரதான சாலையில் இன்று இரவு தாறுமாறாக சென்ற கார் மோதியதில் பத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

Update: 2022-12-08 17:14 GMT

விபத்தை ஏற்படுத்திய கார்.

தூத்துக்குடி நகரில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்று சிவன் கோயில் பகுதியில் அமைந்துள்ள சாலை ஆகும். இந்த சாலையில் இன்று இரவு தாறுமாறாக கார் ஒன்று வேகமாக மின்னல் வேகத்தில் சென்றது. அந்த கார் எதிரே சாலையில் வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்களை ஏற்படுத்தியவாறு சென்றதால் பலர் காயமடைந்தனர்.


மேலும், தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி பகுதி அருகே வந்த போது காரின் முன் சக்கர டயர் திடீரென வெடித்து சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியபடி நின்றது. பிரதான சாலையில் விபத்தை ஏற்படுத்தியபடியே கார் சென்று கொண்டிருந்ததால் அந்த காரை பின் தொடர்ந்து சென்ற பொதுமக்கள் விரட்டி சென்றனர்.

இதற்கிடையே, கார் நின்ற நிலையில், காரில் இருந்தவர் குடி போதையில் இருந்ததால் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மத்திய பாகம் உதவி ஆய்வாளர் முருகப் பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனம் ஓட்டி வந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த ராபர்ட் விமல்ராஜ் என்பது தெரியவந்தது. அவர் மதுபான கடையில் மது அருந்திவிட்டு போதையில் வேகமாக காரை ஓட்டி வந்ததால் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News