பணி நிரந்தரம் கோரி அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

Thermal Power Plant in Tamilnadu -பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-26 07:14 GMT

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்.

Thermal Power Plant in Tamilnadu -தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல் மின்நிலையத்தில் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை மின்வாரிய ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த தேர்தலின்போது தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைவரும்  மின்வாரிய ஊழியர்களாக பணி நிரந்தர செய்யப்படுபவர் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை.

இந்நிலையில், தூத்துக்குடியில் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஒப்பந்த ஊழியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்வாரிய ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப், பிடித்தம் செய்து அடிப்படை சம்பளத்தை உயர்த்தி வங்கியின் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனல் மின்நிலையத்தின் நுழைவு வாயிலில் நடைபெற்று வரும் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டம் குறித்து ஒப்பந்த ஊழியர்களின் பிரதிநிதி சந்திரன் கூறுகையில், மின் வாரியத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒப்பந்த பணியாளர்களை மின்வாரிய காலி பணியிடங்களில் பணியமர்த்தும் வகையில் பணி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும், தூத்துக்குடி அனல் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை தற்காலிக மின்வாரிய ஊழியர் என்று அறிவிக்க வேண்டும், சம்பளம் நேரடியாக தமிழ்நாடு மின்வாரியத்தால் வழங்கப்பட வேண்டும், தமிழ்நாடு மின்வாரியத்தால் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும், தி.மு.க. தேர்தல் அறிக்கை படி ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் தங்களை பணி நிரந்தர படுத்த வேண்டும் என்றார்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேசிய ஒப்பந்தக்காரர்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்றும் இல்லை என்றால் பணியில் இருந்து நீக்கிவிடுவதாகவும் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அனல் மின்நிலையத்துக்குள் செல்லும் பணி அனுமதி அட்டைகளை ஒப்படைக்குமாறு தொழிலாளர்களிடம் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News