தூத்துக்குடியில் இளைஞரை தாக்கி கூகுள் பே மூலம் ரூ. 50 ஆயிரம் பறித்த சகோதரர்கள் கைது

தூத்துக்குடியில் தனியாக நின்ற இளைஞரை தாக்கி அவரது செல்போனில் இருந்து கூகுள் பே மூலம் 50 ஆயிரம் ரூபாய் பறித்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-13 05:25 GMT

தூத்துக்குடியில் இளைஞரை தாக்கி பணம் பறித்த வழக்கில் கைதான விஜயபெருமாள்.

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர், பொட்டல்க்காடு அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த சிலர் திடீரென பாலாஜியை தாக்கியதுடன் அவரிடம் இருந்து ஸ்மார்ட் வாட்ச், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரது பர்சில் இருந்த 12 ஆயிரம் ரூபாயையும் பறித்துக் கொண்டுள்ளனர்.

பின்னர், அவரை மிரட்டி அவரது செல்போனிலிருந்து கூகுள் பே மூலம் தங்களது நம்பருக்கு 50 ஆயிரம் ரூபாயை அனுப்ப சொல்லி கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பாலாஜி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் குற்றவாளிகளை உடனே பிடிக்க உத்தரவிட்டார்.


இதைத்தொடர்ந்து காவல்துறையினர் கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாலாஜியை தாக்கி வழிபறியில் ஈடுபட்டது பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த விஜயபெருமாள் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணன், உள்ளிட்ட சிலர் என தெரியவந்தது.

உடனே, போலீஸார் கூட்டாக கொள்ளையடித்த விஜய பெருமாள் மற்றும் கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், பாலாஜியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்ச், தங்க மோதிரம் 61 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வழக்கமாக கொள்ளையடிக்கும் நபர்கள் கையில் கிடைத்ததை பறித்துக் கொண்டு செல்வர். ஆனால் தற்போது நூதன முறையில் தனியாக நின்ற இளைஞரை மிரட்டி அவரது செல்போனில் இருந்து கூகுள் பே மூலம் 50 ஆயிரம் ரூபாயை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றச் சொல்லி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News