தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்!

தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-10-18 14:16 GMT

ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விரிவுரை வழங்கினார்.

தமிழக காவல் துறையில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு காவலர் பயிற்சி பள்ளி மூலம் காவல் துறை குறித்த பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு, அந்த பயிற்சி முடித்தவர்கள் ஆயுதப்படையில் பணிபுரிவர். பின்னர், அங்கிருந்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு காவல் நிலையங்களுக்கு பணி வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022 ஆம் ஆண்டில் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 515 பேர் கடந்த 01.06.2023 அன்று முதல் தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் ஆயுதப்படை பயிற்சி காவலராக பயிற்சி பெற்று வருகின்றனர்.

அந்த பயிற்சி காவலர்களுக்கு காவல் துறை குறித்து பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உட்பட பல்வேறு பிரிவுகள் குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

இந்த பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பயிற்சி காவலர்களுக்கு மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு உட்பட மாவட்ட காவல் துறை அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவுரையாற்றி பயிற்சி அளித்தார்.

அப்போது, பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி முதல்வர், காவல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலரக காவல் அலுவலர்கள் மற்றும் பேரூரணியில் பயிற்சி பெறும் ஆயுதப்படை பயிற்சி காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News