ஏரல் அருகே பஞ்சாயத்து தலைவர் படுகொலை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

தூத்துக்குடி அருகே ஏரலில் முன்விராேதம் காரணமாக பஞ்சாயத்து தலைவர் படுகாெலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-08-19 05:43 GMT

பைல் படம்

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள வீரபாண்டி நகரை சேர்ந்தவர் பொன்சீலன் (வயது45). இவரது மனைவி எஸ்தர் மெர்லின். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் ஏரல் அருகே உள்ள அகரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில் அகரம் பகுதியில் உள்ள கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இன்று நடந்த கறி விருந்தில் கலந்து கொள்வதற்காக பொன்சீலன் அங்கு சென்றார்.அப்போது அங்கு மறைந்து இருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த பொன்சீலன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொன்சீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பஞ்சாயத்து தலைவரை கொலை செய்தது அகரம் பகுதியை சேர்ந்த ஜெபாசிங் (38), ரூபன் (48), ஜெகன் (42), ஜெபாஸ்டின் ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு அகரம் பகுதியை சேர்ந்த லெனின் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்சீலன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் தீர்ப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக பொன்சீலனுக்கும், லெனினின் உறவினர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

தற்போது போலீசார் தேடும் ரூபன் மற்றும் ஜெகன் ஆகியோர் ஏற்கனவே 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட லெனினின் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர். எனவே அந்த கொலைக்கு பழிக்கு பழியாகவே பொன் சீலன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கொலையில் ஈடுபட்ட ஜெபாஸ்டின் தற்போது நடந்து முடிந்த தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. பொன்சீலன் வெற்றி பெற்று விட்டார். எனவே இந்த தேர்தல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News