தூத்துக்குடியில் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விவசாயிகளிடம் கனிமொழி எம்.பி.கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

Update: 2024-01-02 14:34 GMT

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி,நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 16 மற்றும் 17 ம் தேதிகளில் பேய்மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழையும், திருச்செந்தூரில் 64 செமீ மழையும் பெய்தது வரலாறு காணாத மழையாக கருதப்பட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்ற ஒரு மழை பெய்ததாக சீனியர் சிட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தூத்துக்குடிக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்கள். மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (02/01/2024) தூத்துக்குடி விமான நிலையத்தில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி தரவும், உடைப்பு ஏற்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் உடனடியாக சீரமைத்து கரைகளைப் பலப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு மானிய விலையில் குறுகிய கால நெல் விதைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன. மனுவைப் பெற்றுக் கொண்ட கனிமொழி எம்பி, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும்,மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News