கொரோனாவை எதிர்கொள்ள மாவட்டத்தில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது-அமைச்சர் தகவல்

கொரோனா தொற்று பாதிப்பை சமாளிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது எனஅமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்

Update: 2021-06-11 10:37 GMT
அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 6 வீல்சேர் மற்றும் 6 ஸ்டெச்சர்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவனிடம் ஐஓபி நிறுவனம் மண்டல மேலாளர் ஸ்ரீராம் வழங்கினார். அவைகளை பெற்று அமைச்சர் கீதாஜீவன் மருத்துவமனை முதல்வர் நேருவிடம் வழங்கினார்.

பின்னர், சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டலத்தில் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பில் 6 வீல்சேர் மற்றும் 6 ஸ்டெச்சர்கள் இதில் ஒரு வீல்சேர் மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் வழங்கியுள்ளார்கள். இது நமது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் சேவை உள்ளம் கொண்ட அனைவரும் அதிகமான அளவில் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்து வருகிறார்கள். இதுவரை 200 ஆக்சிஜன் செறிவுட்டிகள் பெறப்பட்டுள்ளது. அவைகள் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கும் மற்றும் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு கொரோனா தொற்று நோயாளிகள் உயிர் பிழைத்துள்ளனர்.

நமது தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் ஓய்வின்றி கொரோனா பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆக்சிஜன் தட்டுப்பாட்டினை விரைந்த நடவடிக்கையின் மூலம் தீர்த்து வைத்துள்ளார்கள். இன்று நாம் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்றிறைவு பெற்றுள்ளோம். பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தேவையான கருவிகளை வழங்கி உள்ளார்கள். மாஸ்க், சானிடைசர், பிபி கிட் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும் மற்றும் மெத்தை, உள்ளிட்ட மருந்து பொருட்களையும் வழங்குகிறார்கள். மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தூத்துக்குடி மருத்துவமனையில் மட்டும் 750 படுக்கைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 318 ஆக குறைந்துள்ளது. தொற்று பரவலும் குறைந்து வருகிறது. இனி வருங்காலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் வகையில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் அதிகப்படுத்தபட்டுள்ளது. நம்முடைய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறைகளின் கூட்டு முயற்சியால் கொரோனா கட்டுப்படுத்த சிறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலேஸ், ஐஓபி தலைமை மேலாளர் ஹன்சராஜ், வங்கி பணியாளர்கள் சங்க தலைவர் ஆண்டனி தனபால், ஐஓபி மண்டல வள அலுவலர் அலெக்ஸ், முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன், ஜெகன்பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News