ஆத்தூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர், ஊழியர் கைது

ஆத்தூரில் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-05-26 14:31 GMT

கொலை வழக்கில் கைதான மோசஸ் அமல்ராஜ், முகமது தாஹா.

ஆத்தூரில் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹோட்டல் உரிமையாளர், ஊழியர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலாத்தூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம் அருகே கடந்த 24 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூததுக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? என தெரியாத நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ்  மேற்பார்வையில், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலையுண்ட நபர் சம்பவ இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றதாகவும், இதனையடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளரான வடக்கு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மோசஸ் அமல்ராஜ் (46) மற்றும் ஹோட்டலில் வேலை பார்க்கும் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது தாஹா (25) ஆகிய 2 பேரும் அந்த நபரிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் படுகாயம் அடைந்த அந்த நபர் உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

உடனே மோசஸ் அமல்ராஜ் மற்றும் முகமது தாஹா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையுண்ட நபர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News