61 நாள் மீன்பிடி தடை காலம் இன்று முதல் அமல்

61 நாள் மீன்பிடி தடை காலம் இன்று முதல் தொடங்குவதால் நிவாரண தொகையை ரூ.7500 ஆக உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை.

Update: 2021-04-15 04:39 GMT

மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால், கரையில் நிறுத்தப்பட்ட படகுகள்

தமிழகத்தில் இன்று முதல் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் சுமார் 5 லட்சம் மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் பிடி தடைகால நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத்தில் இந்து ரூ.7500 ஆக உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. எனவே விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக இந்த குறிப்பிட்ட 61 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க கூடாது.

கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் இன்று இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கரை திரும்பிக்கொண்டிருக்கின்றனர். தடைகாலம் இன்று நள்ளிரவில் அமலுக்கு வருவதால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துகுடி, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தால் 13 கடலோர மாவட்டங்களிலும் சுமார் 5லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மீன்பிடித்தடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 135 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை ரூ.5 ஆயிரத்தை ரூ.7500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் நிவாரணத்தொகை ரூ.4 ஆயிரம் தற்போது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News