தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-28 14:12 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. உப்பளங்களிலும் தண்ணீர் தேங்கி கிடந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் விவசாய பணிகளை தொடங்க தயாராகி வருகின்றனர்.

மாவட்டத்தில் இன்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூர் 8 மில்லி மீட்டர், குலசேகரன்பட்டினம் 1, விளாத்திகுளம் 13, வைப்பார் 3, சூரங்குடி 3, கோவில்பட்டி 18, கழுகுமலை 13, கயத்தார் 63, கடம்பூர் 87, ஓட்டப்பிடாரம் 2, மணியாச்சி 15, கீழஅரசடி 2, எட்டயபுரம் 8.4, சாத்தான்குளம் 5.2, ஸ்ரீவைகுண்டம் 8, தூத்துக்குடி 5.1 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், ஞாயிற்றுக்கிழமை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்கரை பகுதியில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மேற்படி நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம், மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீன்பிடிஉபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். மீனவர்கள் இந்த வானிலை எச்சரிக்கையை தங்கள் மீனவ கிராமங்களில் ஆலயங்கள், மீன்பிடி இறங்குதளங்கள், மீன் ஏலக்கூடத்தில் அறிவிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News