துப்பாக்கிசூடு குறித்த கருத்திற்கு ஆதாரம் இல்லை- ரஜினி விளக்கம்

Update: 2021-04-22 11:45 GMT

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தான் தெரிவித்த கருத்திற்கு தன்னிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என எழுத்துப்பூர்வமாக ஒரு நபர் ஆணையத்திடம் ரஜினி தெரிவித்துள்ளதாக ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் பேட்டியின் போது கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு குறித்து நீதி விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இந்த கமிஷன் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி மற்றும் சென்னையில் உள்ள முகாம் அலுவலகங்களில் வைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு நபர் கமிஷனின் 27 வது கட்ட விசாரணை கடந்த 19ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் குறைந்தவுடன் நடிகர் ரஜினிகாந்திடம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒருநபர் ஆணையம் நிச்சயம் விசாரணை நடத்தும். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ரஜினிகாந்திற்கு அனுப்பிய சம்மனுக்கு அவருடைய வழக்கறிஞர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு எதேச்சையாக நடைபெற்ற ஒன்று.

நடந்த சம்பவம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்திற்கு தன்னிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளார்.  இருந்தபோதும் ரஜினிகாந்திடம் விசாரணை ஆணையம் கண்டிப்பாக விசாரணை நடத்தும். தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தொற்று குறைந்த பிறகு ரஜினிகாந்திடம் விசாரணை நடைபெறும் என்றார்.

Tags:    

Similar News