சாதனை செய்ய வயது ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த 62 வயது முதியவர்.

விளையாட்டுத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட அந்த முதியவர் வித்தியாசமான முறையில் ஒட்டத்தை நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

Update: 2022-10-16 04:20 GMT

மங்கி ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள விளையாட்டு வீரர் இம்மானுவேல், ஜஸ்வின், க்ரிஷ், மாதேஷ்.

நாம் எல்லோரும் வாழ்வில் ஏதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும் என்று எண்ணி பலமுறை முயன்று தோற்று இருப்போம். இன்னும் பலமுறை முயன்று கொண்டிருக்கிறோம். விடாமுயற்சி வெற்றி தரும் என்ற சொற்களுக்கு ஏற்ப தூத்துக்குடி சார்ந்த முதியவர் ஒருவர் தனது சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

விளையாட்டுத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட அந்த முதியவர் வித்தியாசமான முறையில் ஒட்டத்தை நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் ஈசி பிட்னெஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கில் முதல் முறையாக விநோதமான மங்கி ஓட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியில்  62 வயது விளையாட்டு வீரர் இம்மானுவேலுடன் மாணவர்களான ஜெஸ்வின், கிருஷ், மாதேஷ் என 3 சிறுவர்கள் குரங்கு மாதிரியாக ஓடிய விழிப்புணர்வினை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி 3ம் மைலில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு குரங்கு ஓட்டம் 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து டீச்சர்ஸ் காலனி சந்திப்பில் முடிவடைந்தது. தொடர்ந்து, போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கினர்.

ஓட்டப்பந்தய வீரரான இம்மானுவேல் மற்றும் அவருடன் 3 சிறுவர்களும் இரண்டு கால்கள் மற்றும் கைகளை தரையில் ஊன்றியபடி குரங்கு மாதிரியாக ஓடி வந்ததை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

விழிப்புணர்வு சாதனை ஓட்டத்தை தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் மது நாட்டிற்கு கேடு வீட்டிற்கு கேடு, புகையிலைப் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் அப்துல் கலாம் கண்ட இளைஞர்கள் போதைகளில் இருந்து மீட்போம் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் போன்ற வாசகங்களை கூறி போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்தனர்.

உடல் வலிமையாக இருக்கும் பொழுது மனம் வலிமை பெறும். மனம் வலிமையாக இருக்கும் பொழுது நாம் நினைத்த எண்ணங்களை செயல்படுத்தி விடலாம். அனைவரும் உடல் வலிமை பெற உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போதை பொருட்களை தவிர்க்கும் பொழுது மேலும் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும் . எனவே போதை பொருள்களை தவிர்ப்போம் என மங்கி ஓட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதில், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், ஜான், எபன் பள்ளி தாளாளர் ஜாய்பெல் பிராங்க், எஸ்.ஏ.வி பள்ளி தாளாளர் பாலாஜி, மேயரின் உதவியாளர்கள் ஜேஸ்பர், பிரபாகர், ரமேஷ், சிலம்ப பயிற்சியாளர் ராஜலிங்கம், கராத்தே பயிற்சியாளர் ஜெயக்குமார் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தூத்துக்குடி ஈசி பிட்னெஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் இம்மானுவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News