தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் வணிகம் புரிவது சட்ட விதிமீறல் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-06-22 03:37 GMT

கோப்புப்படம் 

உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் தரம் குறித்து கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் வியாபாரிகள் யாரும் உணவு வணிகம் செய்யக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னரோ உணவு வணிகம் புரிவது என்பது சட்ட விதிமீறல் என்பதால் உணவு பாதுகாப்புத் துறையால் உணவு வணிக நிறுவனம் மூடப்படும். மேலும், ஐந்து லட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது மட்டுமன்றி, உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், இது போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் மேலும், எந்தவொரு வணிகரும் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் கடை உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.

உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகராளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News