15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-20 14:04 GMT

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கல்யாணராமன், கவுரவ பொதுச்செயலாளர் ஜேசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பெனிஸ்கர், தம்பிராஜ், உலகநாதன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாய கடன்கள் வழங்க குறியீடு நிர்ணயித்து பணியாளர்களை கண்ணியகுறைவாக நடத்துவதை கைவிட வேண்டும், பயிர்க்கடன்கள் தள்ளுபடியில் பயனாளிகள் பட்டியலை விரைந்து வழங்க வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கியில் சங்கங்களின் ரொக்க பரிவர்த்தனைக்கு 2 சதவீதம் டி.டி.எஸ். பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பொங்கல் பரிசு தொகுப்புகளை பேக்கிங் செய்து வழங்க வேண்டும், கடன்கள் வழங்குவதற்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் கென்னடி, சுப்பையா, குமரேசன், எட்வின், ஆறுமுகம், திருமணி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News