இந்தியாவில் வெயில் உக்கிரம்! ஆப்பிரிக்காவை மிஞ்சியது

உலகின் மிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக இருக்கும், ஆப்பிரிக்கா பகுதியை விட, இந்தியாவில் வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது.;

Update: 2024-04-10 03:02 GMT

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி வருகிறது. வெப்பம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வெப்ப அலையின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதுகுறித்து எச்சரித்திருந்தது வானிலை மையம்.

இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறியிருந்தது. அதாவது, வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகள், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த முறை வெப்பம் இயல்பாகதான் இருக்கும்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என்று எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் நேற்று, 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்தது.

அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரியும், சேலம் மற்றும் திருப்பத்தூரில் 106.8 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 106.3 டிகிரியும், நாமக்கல்லில் 105.8, திருச்சி, தருமபுரியில் 105.2, திருத்தணியில் 104.7, தஞ்சாவூர், கரூர் பரமத்தியில் 104, மதுரை விமான நிலையம் 103.6, கோவை, 103.2, சென்னை மீனம்பாக்கம் 102.2, மதுரை நகரில் 101.4, பாளையங்கோட்டையில் 100 டிகிரியும் வெயில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், உலகின் மிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக இருக்கும் ஆப்பிரிக்காவை விட, இந்தியாவில் வெயில் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள் மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இதே ஆப்பிரிக்காவில், மாலி, நைஜர், சூடான், வடக்கு எத்தியோப்பியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தான் வெயில் 99-102 டிகிரியை அளவில் பதிவாகியுள்ளது.

மற்றபடி, தென்னாப்பிரிக்கா, ஜாம்பியா, டான்சானியா, கென்யா, எகிப்து, லிபியா, அல்ஜீரியா உள்ளிட்ட பகுதியில் வெயில் குறைவாகத் தான் இருக்கிறது. வழக்கமாக இந்த பகுதிகளில் வெயில் அதிமாக இருக்கும். இந்தியாவில் தான் வெயில் குறைவாக இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வெயில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான தெர்மல் இமேஜ் செயற்கைக்கோள் படங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன.

வெப்பம் இப்படியே சென்றால் இந்தியாவில் வெப்பம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மறுபுறம் மின்சாரத்திற்கான நுகர்வும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நீர் மின் உற்பத்தியானது குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News