பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
Rajathi Raja movie songs- ராஜாதி ராஜா படத்தில் இடம் பெற்ற பாடலில், தன்னை மீண்டும் இசையின் ராஜா என இசைஞானி நிரூபித்து காட்டியிருந்தார்.;
Rajathi Raja movie songs- தமிழ்ப்பட உலகில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் ஒரு சில பாடல்கள் இருக்கும்.அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்த படம் ராஜாதி ராஜா. இளையராஜாவின் தூக்கலான இசையில் பாடல்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பின. பாடலை எழுதியவர் இசைஞானி இளையராஜா. மனோ, சைலஜா பாடியது. ரஜினியுடன் ராதா, நதியா இணைந்து நடித்தனர்.
ஊட்டி, குன்னூரில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட அங்கு ஒரே மழை. பின்னர் கோத்தகிரி போனார்கள். அங்கும் மழை. எங்கு போனாலும் மழை துரத்த... கடைசியில் ஊட்டியில் மழை நின்றதும் படப்பிடிப்பு நடத்தினர்.
வா வா மஞ்சள் மலரே… தா தா கொஞ்சும் குயிலே... எனப் பாடல் ஆரம்பிக்கிறது. வைரமணி தேரினிலே, உன்னை வச்சி நான் இழுப்பேன்… என்னுயிரே… ஆ.. ஆ.. எனப் பாடல் ரசனையைத் தெறிக்க விடுகிறது.
குயில் வந்து கூவையிலே, குஷியான பாடலிலே, உயிர் வந்து உருகுதையா, ஒயிலாள் மனம் தவிக்குதையா என சைலஜா உருக, மனோ இப்படிப் பாடுகிறார். வாசக் கருவேப்பிலையே உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா… வீசும் இளம் தென்றலிலே உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா… என்கிறார்.
2-வது சரணம் முழுவதும் திருமணச் சடங்குகளைப் பற்றிச் சொல்லியிருக்கும். இந்தப் பாடலில் இளையராஜா ஒரு புதுமையைச் செய்திருப்பார். மனோ பாடும் போது 2 மனோ பாடுவது போலவும், சைலஜா பாடும் போது 2 சைலஜா பாடுவது போலவும் இருக்கும்.
எப்படி என்றால், இந்தப் பாடல் 2 முறை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் முதலில் பா வில் ஆரம்பித்தால் அந்த ‘பா’ சுரஸ்தானத்தை அடிப்படையாக வைத்துப் பாட வைப்பார்கள். மறுமுறை ‘ச’ சுரஸ்தானத்தில் இறக்கிப் பாட வைப்பார்கள். இப்போது ரெண்டையும் சேர்க்கும் போது பாடல் வேற லெவலில் நமக்கு ரசனை விருந்தாகிறது. இந்த விஷயத்தை மிகவும் இசை நுணுக்கம் அறிந்தவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஆனால் எல்லோராலும் ரசிக்க முடியும். அதுதான் இளையராஜா.