தேனி டி.எஸ்.பி.,க்கு ஜனாதிபதி பதக்கம்
தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., கே.சுந்தர்ராஜ்க்கு சிறந்த தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது.;
தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் கே.சுந்தர்ராஜ் கடந்த 1990ம் ஆண்டு எஸ்.ஐ., ஆக போலீஸ் பணியில் சேர்ந்தார். இவர் போத்தனுார் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது, ஜாதி, மத கலவரங்களை தடுத்து, பொது அமைதியை நிலைநாட்டுவதில் சிறப்பாக பணியாற்றினார். இவரது நேர்மையான பணி காரணமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டார். தவறு செய்த அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, கோவை விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் செய்த பல கோடி ரூபாய் மோசடிகளை வெளி உலகிற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுத்தது என அப்போதே போலீஸ்துறையில் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்தார்.
திருப்பூரில் இவர் மாநகர குற்றப்பிரிவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றிய போது, முறைகேடு மற்றும் மோசடியில் பறிபோன 6 ஆயிரத்து 152 பவுன் தங்க நகைகளை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் திருப்பிக் கொடுத்தார். 40 லட்சம் ரூபாய் வங்கி மோசடியை கண்டறிந்து பணத்தை மீட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேரையும் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு வந்தார். அடுத்தடுத்து கோவை (காவல் உ தவி ஆணையர்) மற்றும் பழனி டி.எஸ்.பி.,யாக பணியாற்றினார். அந்த காலகட்டங்களில் 13 கொலை வழக்கு, 3 போக்சோ வழக்கு, 7 வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தார்.
இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்தார். 23 ஆண்டுகளாக போலீஸ்துறையில் பணியாற்றிய இவர், ஒருமுறை கூட தண்டனைக்கு உள்ளானது இல்லை. தவிர 2009ம் ஆண்டு தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற்றார். இந்த சிறந்த பணிகளுக்காக இவருக்கு 2020ம் ஆண்டு மெச்சத்தக்க பணிக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது. (கொரோனா பேரிடர் காரணமாக இந்தி விழா தாமதம் ஆனது) இந்நிலையில் இந்த பதக்கத்தை டி.எஸ்.பி.க்கு முதல்வர் மு.க., ஸ்டாலின் கடந்த 27ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் வழங்கி கவுரவித்தார். இதனை தொடர்ந்து தேனியில் நடந்த பாராட்டு விழாவில் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, பாராட்டி பரிசு வழங்கினார். மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.