பெரியகுளம் அரசு மருத்துவமனை டாக்டர்களை பணியிடம் மாற்றம் செய்ய கோரிக்கை
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேனி கலெக்டரிடம் சிவசேனா புகார் கூறியுள்ளது.;
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பத்துஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளை பணியிட மாற்றம் செய்யக்கோரி சிவசேனா மாநில துணை செயலாளர் குருஅய்யப்பன் கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தார்.
சிவசேனா மாநில துணைச் செயலாளர் குருஅய்யன் தேனி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடமாறுதல்இன்றி டாக்டர்கள், செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்கள் பணியினை செய்வதில் இருந்து தவறி விடுகின்றனர். சிறுநீரக கல் அடைப்பால் வலியில் துடித்த பெண் ஒருவரை ஒரு டாக்டர் பல மணி நேரம் வேடிக்கை பார்த்து சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்துள்ளார். இங்குள்ள மனநலப்பிரிவின் நிலையோ பெரும் மோசம். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவு நிலை மோசமாக உள்ளது.
கடந்த வாரம் கூட ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரே இடத்தில் நீண்ட காலம் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் காட்டும் அலட்சியத்தால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை.அவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு இரண்டு அல்லது மூன்று பஸ் பிடித்து வந்து அலைந்து சிகிச்சை பெறும் அவல நிலை நிலவுகிறது. இந்த சூழலை கருத்தில் கொண்ட கலெக்டர் தங்கள் பணியினை செய்யாதவர்கள் மீதும், பல ஆண்டுகளாக குறிப்பாக 10 ஆண்டுகளை கடந்தும் ஒரே இடத்தில் பணியில் அமர்ந்து கொண்டு சம்பளம் வாங்குபவர்களையும் கலெக்டர் இடமாற்றம் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுத்து பெரியகுளம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.