தேனி மாவட்டம் வழியாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை; வனத்துறை அறிவிப்பு
தேனி மாவட்டம் வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை என வனத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.;
பைல் படம்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்டம், தேனி மாவட்டம் வழியாக செல்ல மூன்று மலைப்பாதைகள் உள்ளன. பெரும்பாலான பக்தர்கள் விருதுநகர் மாவட்டத்தின் வழியாகவே செல்வார்கள். ஆனாலும் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தேனி மாவட்ட வனப்பகுதி வழியாக செல்வார்கள்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேகமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் இந்த மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம்.
அப்படி இருந்தும் சில பக்தர்கள் உள்ளே வந்து விடுகின்றனர். இந்த ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவின் போது பக்தர்கள் கோயிலுக்கு செல்ல விருதுநகர், மதுரை மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்து உள்ளன.
தேனி மாவட்டத்திலும் நாங்கள் மலைப்பாதையை மூடி விட்டோம். பக்தர்கள் செல்ல அனுமதியில்லை. கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் தயவு செய்து இந்த மலைப்பாதையினை பயன்படுத்தி ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என அவர்கள் தெரிவித்தனர்.