தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தி உள்ளது.;

Update: 2024-02-19 00:35 GMT

தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணி வாரவழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி காரியாலயத்தில் வார வழிபாடு கூட்டம் நடைபெற்றது. தேனி நகர செயற்குழு உறுப்பினர் எஸ்.நாகலிங்கம்  தலைமை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வபாண்டி  முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் க.ராமராஜ் வழி நடத்தினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் நடந்த கோரமான பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்து எழுச்சி முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறது.

தமிழ்நாட்டில் பட்டாசு ஆலை விபத்து என்பது வருடத்தில் இரண்டு மூன்று முறை நடக்கிறது. ஒவ்வொரு முறையும் 10 நபர்களுக்கு மேல் உயிர் இழக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இந்த நிகழ்வுகளை ஒரு சம்பவமாக மட்டும் கருத்தில் கொள்கிறது. அது மாதிரியான விபத்துக்கள் தொடர்ந்து நடக்காத வண்ணம் தடுக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அந்த அப்பாவி கூலித் தொழிலாளர்களின் மரணத்திற்கு அரசே காரணம் என சாமானிய மக்களை நம்ப வைக்கிறது. இனி வரும் காலங்களில் இது மாதிரியான கோர விபத்துக்கள் நடக்காத வண்ணம் தொழிற்சாலைக்கு உரிய கட்டுப்பாடுகளை முறையாக விதித்து அப்பாவி மக்களின் உயிரை காக்குமாறு தமிழக அரசை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தேனி மாநகரில் போக்குவரத்து அதிகாரிகளின் முறையற்ற அறிவிப்பின் காரணமாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தேனி பழைய பேருந்து நிலையத்தில் நிழற்குடையை நிறுவி கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் சிறார்கள் போன்ற பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News