தேனி நகர செயலாளர் பதவிக்காக முதல்வரை சந்தித்த தி.மு.க. வி.ஐ.பி.

தேனி நகர செயலாளர் பதவி கேட்டு தி.மு.க., வி.ஐ.பி., ஒருவர் முதல்வரை நேரில் சந்தி்த்து கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2022-05-18 11:05 GMT

நகர செயலாளர் பதவிக்காக முதல்வரை சந்தித்த தேனி தி.மு.க., வி.ஐ.பி.,ஜீவா.

தேனி தி.மு.க., நகர செயலாளர் பதவிக்கு 12 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 8 பேருக்கான நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் பங்கேற்ற வி.ஐ.பி.,க்களில் ஜீவாவும் ஒருவர்.

இவர் நேர்காணலுக்கு வந்த தி.மு.க., பிரமுகர்களிடம் கூறியதாவது: நான் இதுவரை மூன்று முறை எம்.எல்.ஏ., சீட் கிடைக்கும் என உறுதியாக நம்பினேன். காரணம் பட்டியலில் எனது பெயர் இருந்தது. முதல் முறை அன்பழகன் என்பவருக்கு கொடுத்து விட்டனர். அடுத்த முறை எனக்கு தருவதாக கூறினர். ஆனால் அடுத்த முறையும் சரவணக்குமார் சீட் வாங்கி விட்டார்.

மூன்றாவது முறையாவது எனக்கு கிடைக்கும் என உறுதியாக நம்பினேன். ஆனால் சரவணக்குமாருக்கே மீண்டும் கிடைத்து விட்டது. அப்போதே எனக்கு வேறு பதவி தருவதாக கூறி சமரசம் செய்தனர். நானும் எனக்கு போட்டியாக மூன்று முறை வந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தேர்தலி்ல் வெற்றி பெற வைத்தேன். இப்போது நகர செயலாளர் பதவிக்கு எனது பெயர் முதலிடத்தில் இருந்தது. இதிலும் இப்போது போட்டி வந்துள்ளது.

நான் தமிழக முதல்வரை சந்தித்து கட்சியினர் எனக்கு கொடுத்த வாக்குறுதிகளை பற்றி எடுத்துக் கூறினேன். அவர் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார். எனக்கு தேனி நகர செயலாளர் பதவியாவது தாருங்கள். இதுவரை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவில்லை. நான் சிறப்பாக செயல்படுவேன் என கூறினேன். முதல்வரும் சரி நான் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன் என என்னிடமே கூறினார். இப்போது நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எனக்கு சீட் தந்தால் நிச்சயம் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். அனைத்து பிரிவினரையும் அரவணைத்து செயல்படுவேன் என்று கூறினார்.

இதனை கேட்ட நேர்காணலுக்கு வந்த நிர்வாகிகள், நகர செயலாளர் பதவிக்கு முதல்வர் வரை பேசி விட்டீர்களா? என கேட்டுள்ளனர். ஜீவாவும் நான் பேசி வி்ட்டேன். அதனை தான் உங்களிடம் கூறினேன் என பதிலளித்துள்ளார். நேர்காணல் செய்தவர்கள், உங்கள் வாக்குமூலத்தை தெளிவாக பதிவு செய்து விட்டோம். தலைமைக்கும் தெரிவிக்கிறோம். நம்பிக்கையுடன் இருங்கள் எனக்கூறி அனுப்பி உள்ளனர்.

தேனி என்றாலே, நகர செயலாளர் பதவியாக இருந்தாலும் சரி, நகராட்சி தலைவர் பதவியாக இருந்தாலும் சரி முதல்வரிடம் சென்ற விடுகிறார்களே என நேர்காணலுக்கு வந்தவர்கள் ஆச்சர்யப்பட்டு பேசிக்கொண்டனர்.

Tags:    

Similar News