‘சட்டா பஜார்' பெட்டிங் : ரூ.7 லட்சம் கோடி..!
இன்று ஓட்டு எண்ணிக்கை முடிவுகளின் அடிப்படையில் சட்டாபஜார் கட்டிய பந்தய தொகைகளின் மதிப்பு மட்டும் 7 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும்.;
ராஜஸ்தானின் பலோடி நகரில் கடந்த 1952-ம் ஆண்டில் ‘சட்டா பஜார்' என்ற சூதாட்ட அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் சூதாட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலின் போது'சட்டா பஜார்' சூதாட்ட அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை நடத்துகின்றன.
இதன்படி தற்போதைய மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் பலோடி, மகாராஷ்டிராவின் மும்பை, குஜராத்தின் பாலன்பூர், சூரத், கர்னால், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, மத்திய பிரதேசத்தின் இந்தூர், கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த ‘சட்டா பஜார்' சூதாட்ட அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளன.
ஒரு மக்களவைத் தொகுதியில் சுமார் 40 முகவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தி ராஜஸ்தானின் பலோடி நகரில் உள்ள தலைமை சூதாட்ட அமைப்புக்கு புள்ளிவிவரங்களை அளித்துள்ளனர். ஒட்டுமொத்த ‘சட்டா பஜார்' சூதாட்ட அமைப்புகளின் புள்ளிவிவரங்களின்படி பாஜக தனித்து 303 தொகுதிகளில் வெற்றி பெறும். மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 64 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணித்துள்ளன.
இவற்றை மையமாக வைத்து பல்வேறு நகரங்களில் சுமார் ரூ.6 லட்சம் கோடி முதல் ரூ.7 லட்சம் கோடி வரை சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்படியோ இன்று தெரிந்து விடும்.