'எகிறி துள்ளிய' அயிரை மீன் 'விலை' - அசைவப் பிரியர்கள் 'திடுக்'

தேனி மாவட்டத்தில், அயிரை மீன்களின் விலை ஒரு கிலோ ரூ 1200 முதல் ரூ 1800 வரை விற்பனையாகிறது. அயிரை மீன் விலை உயர்வு, அசைவப் பிரியர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.

Update: 2023-01-29 08:24 GMT

அயிரை மீன்.

தேனி மாவட்டத்தில், அயிரை மீன் அதிகளவில் பிடிக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு, வராகநதி, சுருளியாறு, கொட்டகுடி ஆறு, மஞ்சளாறு படுகைகள் அனைத்திலும் அயிரை மீன் பிடிக்கப்படுகிறது. தவிர, தேனி மாவட்டத்தில் விவசாய நிலப்பரப்பில் 40 சதவீதம் வயல்வெளிகள் தான். இதனால் நீரோடைகள் அதிகம் உள்ளன. இப்பகுதியிலும் அயிரை மீன் அதிகம் பிடிக்கப்படுகிறது.

இம்மீன் மருத்துவ குணமுடையது. இம்மீன்குழம்பை நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டால், நாள்பட்ட சளியாக இருந்தாலும் இறங்கி விடும் என்கின்றனர். ஜலதோசத்திற்கு அரிய மருந்து என்கின்றனர்.

சங்க இலக்கிய காலம் முதல் அயிரை மீன் தமிழர்களின் உணவில் இடம் பிடித்து வருகிறது. தேனி மாவட்டத்தில், சில முக்கியமான ஓட்டல்களில் கூட தேவைக்கு ஏற்ப அயிரை மீன் கிடைப்பதில்லை. காரணம் தேவை மிக, மிக அதிகம் உள்ள நிலையில், அயிரை மீன் உற்பத்தி மிக, மிக குறைவாக உள்ளது. தவிர தேனி மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பெரும் நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

அயிரை மீனுக்கு கிராக்கி ஏற்பட இதுவே மிகவும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் அயிரை மீன் அதிகம் பிடிபட்டாலும், இங்குள்ள மக்களுக்கு அயிரை மீன் எட்டாக்கனியாகவே உள்ளது. தேவைப்படும் சிலர் மீன் பிடிப்பவர்களிடம் முன்பணம் கொடுத்து அயிரை மீன் பிடிக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில், அயிரை மீன்களின் விலை ஒரு கிலோ ரூ 1200 முதல் ரூ 1800 வரை விற்பனையாகிறது. அயிரை மீன் விலை உயர்வு, அசைவப் பிரியர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.

Similar News