ஆந்திராவில் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட பணம் ரூ.8 கோடி பறிமுதல்
ஆந்திராவில் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட பணம் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் குழாய்களை ஏற்றிச் சென்ற லாரிக்குள் ரகசிய அறை அமைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ8 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புஷ்பா திரைப்படத்தில் செம்மரக் கட்டைகளை கடத்துவதற்கு நாயகன் நூதன வழிகளை கையாள்வான். கடத்தலுக்காகவே லாரிக்குள்ளேயே ஒரு பகுதியை உருவாக்கி செம்மரக்கட்டைகளை கடத்துவான்.
தற்போது ஆந்திராவில் ரூ 8 கோடி ரொக்கத்தை அதே பாணியில் கடத்த முயன்றவர்கள் பிடிபட்டுள்ளனர். ஆந்திராவின் கரிகாபாடு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கினர் அதிகாரிகள். குழாய்களை ஏற்றிச் சென்ற இந்த லாரியில் தீவிர சோதனை நடத்தப்பட்ட போது எந்த பணமும் சிக்கவில்லை. குழாய்களை அகற்றிவிட்டு லாரியை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்த போது அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கின்றனர். குழாய்களை வைத்து லாரிக்குள்ளேயே அதன் கீழே ரகசிய அறைகளை அமைத்திருந்தனர். அந்த ரகசிய அறைக்குள் கட்டுக் கட்டாக ரூ8 கோடி ரொக்கப் பணம் பதுக்கியும் வைத்திருந்தனர்.
ஒட்டுமொத்தமாக ரூ 8 கோடி ரொக்கம், லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரியில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். அப்போது ஹைதராபாத்தில் இருந்து குண்டூருக்கு ரூ 8 கோடி பணம் எடுத்துச் செல்லப்படுவதாகத் தெரிவித்தனர். இந்தப் பணம் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது? என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் ஓய இருக்கும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.