மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு இயந்திரங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-08 17:05 GMT

மத்திய பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீ பிடித்து எரிந்தன.

மத்திய பிரதேசத்தில் ஓட்டுகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பெதுல் லோக்சபா தொகுதிக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தொகுதியில் வேட்பாளர் மரணத்தால் ஏற்கனவே நடைபெற வேண்டிய வாக்குப் பதிவு மே 7-ந் தேதி நேற்று நடைபெற்றது.

பெதுல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட முல்தாய் சட்டசபை தொகுதியில் கோவுலா கிராமத்தில் ஓட்டுப் பதிவு முடிவடைந்த பின்னர் ஓட்டுகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் சென்ற வாகனம் நடுவழியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள் கீழே குதித்து உயிர் தப்பினர். ஆனால் இந்த தீ விபத்தில் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரிகள், இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன என்றனர். பெதுல் காவல்துறை கண்காணிப்பாளர் நிசால் ஜகாரியா கூறுகையில், 6 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பேருந்தில் ஏற்பட்ட கோளாறில் திடீரென தீ பிடித்தது. 2 வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஆனால் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதிக்கப்பட்டன. இப்பேருந்தில் பயணித்த 36 தேர்தல் அதிகாரிகளும் காயமின்றி உயிர் தப்பினர். சிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினர். பின்னர் வேறு ஒரு பேருந்தில் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.

Tags:    

Similar News