போடி : ரேஷன் கடையில் மதுஅருந்தி அசுத்தப்படுத்தும் குடிமகன்கள்

போடியில் குடிமகன்களின் தொல்லையால் ரேஷன் கடை பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2021-11-25 07:48 GMT

குடிமகன்களின் தொல்லையால் பாதிக்கப்படும் போடி ரேஷன் கடைகள்.

போடியில் இரவு நேரத்தில் ரேஷன் கடை முன்பு மதுஅருந்தும் குடிமகன்கள், கடையின் முன்பு வாந்தி எடுத்தும், கழிவுகளை வீசியும் அசுத்தப்படுத்துகின்றனர்.

போடி புதுாரில் இரண்டு ரேஷன் கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த  ரேஷன் கடை முன்பு தினமும் இரவு நேரத்தில் குடிமகன்கள் கூடி விடுகின்றனர். கடையின் முன்புறம் உள்ள தளத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். உணவு, ஸ்நாக்ஸ் சாப்பிடுகின்றனர். சாப்பிட்ட பின்னர் மீதம் இருக்கும் உணவு, ஸ்நாக்ஸ்களை கடை முன்பே வீசி எறிகின்றனர். சிலர் கடை முன்பு வாந்தி எடுத்து விடுகின்றனர். பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர்.

காலையில் கடை திறக்க வரும் ரேஷன் கடை பணியாளர்கள் இதனை கண்டு மிகவும் சங்கடத்திற்குள்ளாகின்றனர். இதனை சுத்தம் செய்யவே பணியாளர்களுக்கு நீண்ட நேரம் ஆகிறது. அதுவும் உடைந்த பாட்டில்களை பத்திரமாக பொறுக்கி எடுத்து வேறு இடத்தில் போடுவதற்குள் மிகவும் சிரமப்பட்டு விடுகின்றனர்.

தினமும் நடக்கும் இந்த குடிமகன்கள் தொல்லையால் ரேஷன் பணியாளர்கள் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருகின்றனர். போடியில் இரவு ரோந்து வரும் போலீசார் இந்த குடிமகன்களின் தொல்லைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News