பொதுக்கூட்டத்தில் நன்றி உரையாற்றியவருக்கு குடை பிடித்த எம்எல்ஏ.. வலைதளங்களில் வைரல்

கட்சியின் மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக உழைத்த ஜெகன் நன்றி சொல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது

Update: 2021-11-15 10:45 GMT

புதுக்கோட்டையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மழை பெய்தபோது  நன்றி உரையாற்றியவருக்கு  குடை பிடித்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

புதுக்கோட்டையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மழை பெய்தபோது  நன்றியுரையாற்றியவர் நனையாமல்  குடை பிடித்து நின்ற  அக்கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏவின் செயல் வலைதளங்களில் தற்போது  வைரலாகி வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகர 9-ஆவது மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு மாலையில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டையொட்டி 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த இரண்டு வாரங்களாக நகர் முழுவதும் சுவர் பிளக்ஸ் ,போஸ்டர் விளம்பரப் பணிகளிலும் சமூக ஊடகங்களிலும் தீவிரமான பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

பொதுவாக மாநாடுகள் பொதுக் கூட்டங்களில் களப்பணியாற்றும் அடிமட்ட உறுப்பினர்கள் பெரும்பாலும் மேடைகளில் அமர வாய்ப்பு இருக்காது. வரவேற்பு, நன்றியுரை போன்ற இடங்களில் ஒன்றிரண்டு பேர் இருப்பர். ஆனால், புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னத்துரை சிறப்புரையாற்றினார். இறுதியில் நன்றி செல்ல வேண்டிய நகரக்குழு உறுப்பினர் காயத்திரி எதிர்பாராத விதமாக பொதுக்கூட்டத்திற்கு வர இயலாமல் போனது. 

இதையடுத்து கட்சியின் மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக உழைத்த ஜெகன் நன்றி சொல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. சிறப்புரையாற்றிய சின்னத்துரை எம்எல்ஏ பேசி முடிக்கும் போது மழையும் வந்துவிட்டது. கூட்டமும் கலையத் தொடங்கியது. முறைப்படி நன்றியுரை சொல்ல வேண்டியவரும் இல்லையென்பதால் கூட்டம் இத்தோடு முடிந்துவிட்டது என ஒற்றை வார்த்தையில் முடித்திருக்கலாம். மேடையில் இருந்தவர்களும் இறங்கத் தொடங்கிவிட்டனர்.

நன்றி சொல்லும் வாய்ப்புக் கிடைத்தும் மழையால் பறிபோய்விட்டதே என வருந்தக்கூடாது என்பதற்காக ஜெகனை ஒலிபெருக்கி முன்னால் வரும்படி சின்னத்துரை அழைத்தார். அருகில் இருந்தவரிடம் குடையை வாங்கி நன்றியுரைக்காக அவர் எழுதி வைத்திருந்ததை முழுமையாக வாசிக்கும் வரை அவர் மீது மழைவிழாமல் குடையை பிடித்துக்கொண்டு நின்றார்.  எம்எல்ஏவின் இந்த செயல் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பை  ஏற்படுத்தியது. இக்காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News