மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ 27.24 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கல்

பெங்களூரில் இந்திய அரசின் கட்டுபாட்டிலுள்ள அலீம்கோ நிறுவனத்திடமிருந்து இந்த உதவி உபகரணங்கள் பெற்று வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-26 01:19 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ 27.24 லட்சம் மதிப்பில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.27.24 லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, வழங்கி பேசியதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 0 வயது முதல் 18 வயது வரை உள்ள 490 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் பெங்களூரில் உள்ள இந்திய அரசின் கட்டுபாட்டிலுள்ள அலீம் கோ (ALIMCO) என்ற நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு உதவி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 3,607 குழந்தைகள் பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். இவர்களில் 70 சதவீதத்திற்கு மேல் குறைபாடு உள்ள 490 குழந்தைகளுக்கு (ஆண்கள்:259 மற்றும் பெண்கள்:231) வீல்சேர், காதுகேட்கும் கருவி, ரோலேட்டர், மூன்று சக்கர மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் ரூ.27,24,440 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.  இதில் தமிழக அரசின் சார்பில் 40 சதவீத பங்குத் தொகையாக ரூ.10,89,776ம், ஒன்றிய அரசின் சார்பில் 60 சதவீத பங்குத் தொகையாக ரூ.16,34,664ம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன் (புதுக்கோட்டை), திராவிடச் செல்வம் (அறந்தாங்கி), சண்முகநாதன் (இலுப்பூர்), உதவித்திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News