புதுக்கோட்டை சந்தையில் ஆடுகளின் விற்பனை விலை சரிவு

சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தும், போதிய அளவில் விற்பனையாகததால், ஆடுகளின் விலை இரு மடங்கு சரிந்தது

Update: 2021-09-10 05:01 GMT

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே ஆடுகளின் வரத்து அதிகம் இருந்தும் ஆடுகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாத வியாபாரிகள்

புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விலை இரு மடங்கு  சரிந்து போனதால் ஆடு வளர்ப்போரும், வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆட்டுச் சந்தையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல, பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விற்பதற்கு வியாபாரிகளும் மற்றும் ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் அதிக அளவில் வருகின்றனர். தொடர்ந்து முகூர்த்த நாள்கள் வந்ததால், சென்ற வாரம் ஆடுகளின் விலை பன்மடங்கு உயர்ந்ததுடன்  விற்பனையும் அதிகமாக இருந்தது.

ஆனால், இந்த வாரம் (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல கூடிய  ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தும், எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை. இதன் காரணமாக  ஆடுகளின் விற்பனை விலை இரு மடங்காகச் சரிந்தது.

தற்போது ஆடுகளின் விலை குறைய காரணம்,  புரட்டாசி மாதம் பிறப்பதற்கு சில நாள்களே  இருப்பதும், பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு விரதங்கள் இருந்து வருவதால் இறைச்சிகளின் பயன்பாடு  குறைந்து போனது. இதனால்,  வியாபாரிகளும் இறைச்சிக்கடைக்காரர்களும்  ஆடுகளை  வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை. சென்ற வாரம் ரூ.7000 ,   ரூ.8000   விலைக்கு விற்பனை செய்த ஆடுகள் தற்போது ரூ. 5000, ரூ.6000 என விற்பனையாகிறது. ஆடுகளின் விலை இரு மடங்கு குறைந்துள்ள நிலையிலும் ஆடுகளின் விற்பனை சரிந்தது  குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News