புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு

Pudukkottai Book Festival awards

Update: 2022-06-28 14:00 GMT

புதுக்கோட்டையில் நடைபெறும் 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள தகவல்:புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகத் திருவிழாவினை யொட்டி கலை இலக்கியப் போட்டிகள், புத்தகப் பேரணிகள், புதுக்கோட்டை வாசிக்கிறது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 5 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 2020, 2021ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த நூல்கள் மற்றும் இணையத்தில் வெளியான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு புத்தகவிழா மேடையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. கீழ்க்கண்டவாறு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

கவிதை பிரிவில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை நூல் ஆகிய மூன்று நூல்களுக்கும், கட்டுரை பிரிவில் அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், கலை இலக்கியம் சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்குமாக இரண்டு விருதுகளும், அசல் சிறுகதை நூல் ஒன்றிற்கும், அசல் நாவல் ஒன்றிற்கும், சிறந்த சிறார் இலக்கிய நூல் ஒன்றிற்கும், இணையத்தில் மட்டுமே வெளியாகி நூலாக வெளிவராத, தமிழ் புனைவு(கதை, கவிதை) படைப்பு ஒன்றிற்கும், அபுனைவுப் (கட்டுரை) படைப்பு ஒன்றிற்கும் என மொத்தம் 10 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருதுக்கும் ரூ 5000- பரிசுத் தொகையும், பாராட்டுச்சான்றிதழுடன், விருதுப் பட்டயமும் விழா மேடையில் வழங்கப்படவுள்ளது. மேற்படி விருதுகளுக் கான பரிசீலனைக்கு பதிப்பகத்தார், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் தங்கள் நூல்களையும், தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் அனுப்பி வைக்கலாம்.

நூல்களை அனுப்புவோர் 3 பிரதிகளை, ராசி.பன்னீர்செல்வன், தலைவர், விருதுக்குழு, புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், புதுக்கோட்டை-622001 என்ற முகவரிக்கு (தொடர்புக்கு : 9486752525) அனுப்பி வைக்க வேண்டும்.

இணையப் படைப்புகளின் இணைப்பினை (LINK) rasipanneerselvan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். படைப்புகள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி 12.07.2022. மேலும் தொடர்ப்புக்கு 94867-52525 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News