தேசிய வாக்காளர் நாள்: ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு உறுதி ஏற்பு

வாக்காளர் உறுதி மொழியினை மாணவ, மாணவிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கை வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டனர்

Update: 2023-01-25 15:15 GMT

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், வாக்காளர் உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் 13வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் வாக்காளர் உறுதி மொழியினை மாணவ, மாணவிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கை வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், 13வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், வாக்காளர் உறுதி மொழியினை இன்று (25.01.2023) மாணவ, மாணவிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கை வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இந்திய தேர்தல் ஆணையத்தால், 13வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட, விழிப்புணர்வு குறும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. 

வாக்காளர் உறுதி மொழியான மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்க ளுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலு மின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம். என்ற வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு தலைமையில் மாணவ, மாணவிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கை வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடந்து, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், திருநங்கைகள் வாக்காளர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். மேலும் 13வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023ல் கருடா செயலியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு நற்சான்றுகளை வழங்கினார்.

முன்னதாக 13-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேர்தல் ஆணையம் 1950 ஜன. 25ல் தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அதிகாரம் மிக்கது. இதன் 60வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக 2011 ஜன. 25ல் தேசிய வாக்காளர் தினம் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப் பட்டது. நாட்டில் ஊராட்சி தலைவர் முதல் பிரதமர் வரை மக்கள் ஓட்டளிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 18 வயது பூர்த்தியானவர்கள் தவறாமல் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. அதே போல 18 வயது நிரம்பியவர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து, அடையாள அட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் முதல் லோக்சபா தேர்தல் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக நடந்தன. 1951 முதல் 2014 வரை 16 முறை லோக்சபாவிற்கான தேர்தல் நடந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தலாக 81.45 கோடி வாக்காளர்களுடன் நடந்த 2014 லோக்சபா தேர்தலில் 66.38 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  சே.மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  கருணாகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  பா.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், வட்டாட்சியர்கள் விஜயலெட்சுமி,.கலைமணி (தேர்தல்) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News