கோவிட் 19 தடுப்பூசி: அலுவலர்கள், வர்த்தக சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது

Update: 2021-09-07 09:15 GMT

கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அரசு அலுவலர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு கலந்தாய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், தற்போது கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டைமாவட்டத்தில் தினந்தோறும் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கிசுகாதார வட்டாரங்களில் கிராமங்கள் தோறும், பல்வேறு இடங்களில் கோவிட் தடுப்பூசிமுகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசிமுகாம் நடைபெறும் இடங்கள் குறித்ததகவல்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

எனவே தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ளும் வகையில் ஆட்டோ விளம்பரம் செய்தல், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்துபொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், பொதுமக்களை அழைத்து வருதல் போன்ற பணிகளை உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள்தவறாது மேற்கொள்ளவும், இப்பணிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் சம்மந்தப்பட்ட வர்த்தக சங்கத்தினர் தங்களது கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தவறாமல் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்களும் தாமாக முன்வந்து கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.தடுப்பூசிமுகாம் நடைபெறும் பகுதிகளில் முகாமை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் பொதுசுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, மற்ற ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு முழுமையாக கோவிட் தடுப்பூசி செலுத்திபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தெரிவித்தார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) இராமு, துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார், கலைவாணி, நகராட்சி ஆணையர்கள் நாகராஜன், திருச்செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News