தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை-பேச்சுப்போட்டிகள்

Essay-speaking competitions for school students

Update: 2022-06-29 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2022 அன்று நடைபெறவுள்ளது. 

'தமிழ்நாடு நாள் விழா" கொண்டாடுதல் - தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.07.1967 -ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக சிறப்பாக கொண்டாடப்பெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிவிப்பினை செயற்படுத்துதல் தொடர்பில் அதன் ஒரு பகுதியாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்த வேண்டுமென்று அரசு அறிவித்துள்ளது.

அவ்வறிவிப்பின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற 09.07.2022 சனிக்கிழமை முற்பகல் 09.30 மணியளவில் புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியே நடத்தப்படவுள்ளன.

மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்; வழங்கப்பெற உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகளில் (அரசுப்பள்ளிகள் - அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் - பதின்மப் பள்ளிகள்) 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும்.

முதற்கண் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்நிலை அளவில் இப்போட்டிகள் நடத்தப்பெற்று கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு தனித்தனியே 25 மாணாக்கர்கள் தெரிவு செய்யப்பெறுவார்கள். முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணாக்கர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க முடியும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடக்கும் நாளன்று புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பெற்றுள்ளன.

கீழ்நிலை அளவிலான போட்டிகளில் பங்கேற்பது தொடர்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் செல்லிடைப்பேசி வாயிலாகவோ 99522 80798, நேரிலோ அணுகலாம். பள்ளி மாணவ மாணவிர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News