நடிகர் பி.யு. சின்னப்பா பிறந்த நாள்: பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய ரசிகர்கள்

திரைப்பட நடிகர் பி.யு. சின்னப்பா பிறந்த ஊரான புதுக்கோட்டையில் ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

Update: 2022-05-05 10:23 GMT

பியு சின்னப்பா பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தவ நடிக பூபதி பி.யு. சின்னப்பா பிறந்த நாளை முன்னிட்டு  அவரது ரசிகர்கள் மற்றும் சிலை அமைப்புக்குழுவினர்  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

1940களில் தமிழ்நாட்டின் திரைப்பட நடிகர்களில் சொந்த குரலில் மிகச்சிறப்பாக பாடி நடித்தவர், கத்திச்சண்டை,சிலம்பம் மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர். ஏழை எளியவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கியவர்.  சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர் என பல்வேறு சிறப்புகளுடன் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த பிரபல நடிகர் பி.யு சின்னப்பாவின், 106வது பிறந்த நாள் விழா இன்று புதுக்கோட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பொங்கல் வைத்து  கொண்டாடப்பட்டது.

பி.யு சின்னப்பா சிலை அமைப்புக்குழு தலைவர் புலவர் துரைமதிவாணன் தலைமையில், ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரும், சிலை அமைப்புக்குழுவின் செயல் தலைவருமான ஏவிசிசி. கணேசன், நகராட்சி 40 -ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுப.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சின்னப்பா நகரில் 106 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  புதுக்குளம் பூங்கா என்ற பெயரை பழையபடி பி.யு சின்னப்பா பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யவும், வடக்கு ராஜவீதி பால்பண்ணை சந்திப்பில் பி.யு சின்னப்பா சிலை அமைக்க நகராட்சியின் அனுமதி கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதம் நகர்மன்ற தலைவர்  திலகவதி செந்திலிடம் நேரில் வழங்கப்பட்டது .

நிகழ்வுகளில் நகர்மன்ற உறுப்பினர்கள் கேஆர்ஜி.பாண்டியன், நரிமேடு பழனிவேலு, சிலை அமைப்புக் குழு செயலாளர் பொன்வாசிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் சிவசண்முகராஜா, முத்துகணேசன், பீர்முகமது, ஓயாத அலைகள் கண்ணன், மாரிமுத்து, பொறியாளர் கண்ணன் மற்றும் சின்னப்பா நகர் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News