சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்வு: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்வு செய்யப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-01-04 16:55 GMT

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்பு படம்).

தமிழ்நாட்டில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 2017ல் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு சார்பில் கடந்த 2023 மார்ச் 30ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும் பதிவுக்கட்டணத்தை குறைக்கவும் பல்வறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்ததால், வழிகாட்டி மதிப்பை திருத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு நில அளவை எண் வாரியாக திருத்தம் செய்ய கால அவகாசம் தேவைப்படும். வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதால், குழுவின் அறிக்கை பெறும்வரை வழிகாட்டி மதிப்பை கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கூட்டமைப்பான கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட விதிகளின்படி எந்த கலந்தாலோசனையும் நடத்தாமல், பொதுமக்களின் கருத்துகள் கேட்காமல் வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "வழிகாட்டி மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வு செய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன் பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News