ஜவுளி, நகைக்கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளிக்டைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு, வணிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-06-27 02:12 GMT

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார்

இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

வரும் 28ம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழகம் முழுக்க பெரும்பாலான கடைகள், பல்வேறு நேர அளவுகளில் திறந்து செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது, வணிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

தற்போது அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வு அறிவிப்பில், வகை 3ல் குறிப்பிடப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் திறக்கலாம் என அறிவித்துள்ளது. மற்ற மாவட்ட பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள,  கடைகள் திறக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல ஆரம்பித்தால், அங்கு கூட்டம் கூடுதலாகி கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. துணிக்கடைகள் தாங்கள் சேர்த்து வைத்த வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும்.

எனவே, வணிகர்களின் கோரிக்கையை பரிசீலித்து, அனைத்து மாவட்டங்களிலும், துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும், நேர கட்டுப்பாடுகள் விதித்து செயல்பட, தமிழக முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும் என்று, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News