கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதிக்கு டில்லியில் அந்நாட்டின் தூதருடன் பேச்சுவார்த்தை: ராஜேஷ்குமார் எம்.பி. ஏற்பாடு

நாமக்கல் பகுதியில் இருந்து கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து டில்லியில் உள்ள அந்த நாட்டின் தூதருடன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Update: 2024-12-27 12:30 GMT

கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து, டில்லியில் உள்ள அந்த நாட்டின் தூதர் அஃப்ரா கனிம் அல்ஷலேவுவை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் மற்றும் பண்ணையாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்

நாமக்கல் பகுதியில் இருந்து கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து டில்லியில் உள்ள அந்த நாட்டின் தூதருடன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் முட்டைகள், கத்தார், ஓமன், துபாய் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு திடீரென்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் நாமக்கல்லில் இருந்து கண்டெயினர்கள் மூலம் கப்பலில் அனுப்பிய முட்டைகள் ஓமன் துறைமுகத்தில் இறக்காமல் நின்றது.

இதையொட்டி, நாமக்கல் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து, ஓமன் நாட்டில் நாமக்கல் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாமக்கல் முட்டைகளை இறக்குவதற்கு மத்திய அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இதனால் கோழிப்பண்ணையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

ஏற்கனவே கத்தார் நாட்டிற்கு, நாமக்கல் பகுதியில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த நாடு 60 கிராம் எடைக்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என அறிவித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 50 முதல் 55 கிராம் எடை உள்ள முட்டைகள் மட்டுமே அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் கத்தார் நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி தற்போது தடைபட்டுள்ளது.

கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதி செய்வதற்காக, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலையில், டில்லியில் உள்ள கத்தார் நாட்டின் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியாவுக்கான கத்தார் தூதர் அஃப்ரா கனிம் அல்ஷலேவை சந்தித்து முட்டை ஏற்றுமதி சீரடைய நடவடிக்கை எடுக்கக் கோரி வேண்டுகோள் விடுத்தனர். தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ், முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Similar News