செம்மேடு அரசு பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில், கொல்லிமலை செம்மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கான தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-06-20 03:30 GMT

கொல்லிமலை செம்மேடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தற்கொலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அரசு மன நல மருத்துவர் முகிலரசி பேசினார்.

நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில், கொல்லிமலை செம்மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கான தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர் முகிலரசி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

சில மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களைத் தாங்க முடியாமல், போராட்டங்களை எதிர்த்துப் போராட முடியாமல் தன்னை முடித்துக்கொள்வதுதான் தற்கொலை. தற்கொலை எண்ணத்தை ஒரு நோயாகக் கருதி சிகிச்சை எடுத்துக்கொண்டால், விலைமதிக்க முடியாத உயிரைக் காப்பாற்றலாம்.

மனம் பாதிக்கப்பட்டு இருக்கும் போது சிந்திக்கும் ஆற்றல் குறைந்துவிடும். நிறைவேறாத ஆசைகள்,தேவைகள், வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி, முடிவெடுக்க இயலாத நிலை, தோல்வி ஏற்பட்டால், அந்த பிரச்சனைகளை கையாள முடியாத சூழ்நிலை, அவமானம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள், மனதில் தோன்றும் குற்ற உணர்வு, உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிப்பு, வலியுடன் கூடிய கடுமையான நீண்ட கால வியாதி, மன ரீதியான அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகள், பதட்டமான சூழ்நிலைகள், பொருளாதாரச் சிக்கல்கள், விரும்பத்தகாத சூழ்நிலைகளில் வாழ்தல், சமூகரீதியாக தனிமைப்படுதல் போன்றவை தற்கொலை எண்ணத்தை தூண்டுகின்றன. இதை சமாளிக்கும் திறனை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்கொலை எண்ணத்தில் இருக்கும் யாரையாவது உங்களுக்கு தெரியுமானால் அவர்களோடு பேசுங்கள். திறந்த மனதோடு அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். மற்றும் உங்கள் ஆதரவை அவருக்கு அளியுங்கள். ஒருவர் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டு அவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது என்றால் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிந்து கொள்ள வேண்டும். அவர். மன அழுத்தத்துடனோ, மனச் சோர்வுடனோ, மன பதட்டத்துடனோ, மனக் குழப்பத்துடனோ இருக்கிறார் என சம்பந்தப்பட்டவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ புரிந்து கொண்டு, உடனடியாக அவருக்கு மன நல மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ சிகிக்சை எடுத்துக்கொண்டபிறகு அவர் பிரச்சினைகளை கையாள்வது குறித்தும், முடிவெடுப்பது குறித்தும் சிந்திக்கத் தோன்றும் என்று கூறினார்.

மாவட்ட மனநல ஆலோசகர் ரமேஷ், உளவியலாளர் அர்ச்சனா, தலைமை ஆசிரியர் சுசிலா மற்றும் திரளான மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News