நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் திடீர் பவர் கட்: செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று இரவு, திடீர் மின் தடை ஏற்பட்டதால், டாக்டர்கள் செல்போன் வெளிச்சத்தில் நேயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.;

Update: 2025/05/18 14:30 GMT

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை (கோப்பு படம்)

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதையடுத்து, பல்வேறு இடங்களில், மின் தடை ஏற்பட்டது. நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில் கலெக்டர் ஆபீஸ் பின்புறம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. நேற்று இரவு 7:30 மணிக்கு பெய்த மழையின்போது மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனடியாக ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்தபோது அதுவும் இயங்கவில்லை.

மின் தடையால் ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகள் இருளில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் தங்களிடம் இருந்து செல்போன்களின் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பின், ஜெனரேட்டர் இயங்கியது. அதன்பிறகு ஆஸ்பத்திரி வளாகத்தில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இது குறித்து, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில், இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டபோது, ஜெனரேட்டர் ஆட்டோ ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால், உடனடியாக ஜெனரேட்டர் இயங்கவில்லை. அதைத்தொடர்ந்து, எலக்ட்ரீசியன் மூலம் ஜெனரேட்டர் சரிசெய்யப்பட்டு, அரை மணி நேரத்தில் மின்சார விநியோகம் வழங்கப்பட்டது என்று கூறினர்.

Similar News