குமாரபாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Namakkal news- குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, மாவட்ட ஆட்சியர் உமா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

Update: 2024-01-28 07:00 GMT

Namakkal news- குமாரபாளையம் அருகே அமானி கிராமத்தில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை, மாவட்ட ஆட்சியர் உமா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

Namakkal news, Namakkal news today-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், அமானி கிராமத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்துப் பார்வையிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு மருத்துவ முகாமை நடத்திட தமிழக முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு இலவச பஸ் பயண சலுகை, திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகளை பெறுவதை உறுதி செய்திடும் வகையில் உரிமைகள் திட்டம், மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தாழ்வுதளம் அமைத்தல், இதுபோன்ற ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து சிரமத்தை போக்கும் வகையில் வெண்ணந்தூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று குமாரபாளையம் பகுதியில் நடத்தப்படும் மருத்துவ முகாமில், எலும்பு முறிவு சிகிச்சை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பரிசோதனைகள் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உயர் சிகிச்சைகள், பிசியோதெரபி சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படும்.

மேலும் முகாமில், 59 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை, 54 மாற்றுத்திறனாளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை, 42 மாற்றுத்திறனாளிகளுக்கு யுடிஐடி அடையாள அட்டை, 40 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் பாதுகாப்பு பராமரிப்பு உதவித்தொகை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் 18-வயதிற்குட்பட்டவர்களுக்கான உதவித்தொகை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அடையாள அட்டை, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், 1 மாற்றுத்திறனாளிக்கு தையல் இயந்திரம், 1 மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் ரூ.65,350 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. மேலும், இன்று பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படும் என அவர் கூறினர்.

Tags:    

Similar News